Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு


தினதந்தி
புதுடெல்லி, செவ்வாய்கிழமை, நவம்பர் 11, 2014



ஆசிரியர் நியமன தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு 


ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா என்பவர் மற்றும் பலர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்முறையை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71–ல் வெயிட்டேஜ்முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிப்பெண் சலுகை என்பது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை.

பாதிப்பு 


வெயிட்டேஜ்முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும். இந்த விவகாரம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ்முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசுக்கு நோட்டீசு 


இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் ஹரிஷ் குமார், சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments